திருச்சி மாவட்டம் துறையூரிலிரிந்து கவிஞர் திரிலோகசீதாராமை ஆசிரியராகவும், அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியாரை நிர்வாகப் பொறுப்பாளராகவும் கொண்டு "கிராம ஊழியன்" இதழ் வெளி வந்தது.
ஒரு வருடம் வல்லிக்கண்ணன் துணை ஆசிரியர் பொறுப்பிலும், பின்னர் திருலோகசீதாராம் ஆசிரியர் பதவியிலிருந்து விலகி திருச்சி 'சிவாஜி' பத்திரிகையின் பொறுப்பை ஏற்கப் போய்விட்டதால் வ.க. ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கவிஞர் கலைவாணன், ஈழத்துக் கவிஞர்களான நாவற்குழியூர் நடராஜன், மகாகவி, சோ.தியாகராஜன், க.இ.சரவணமுத்து ஆகியோரின் கவிதைகளையும் ஊழியன் வெளியிட்டது. தி.க.சிவசங்கரன் கவிதை, நாடகம், விமர்சனம் ஆகியவற்றை எழுதினார். அசோகன் (ரா.சு.கோமதி நாயகம்) என்பவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியிடப்பட்டன.
வல்லிக்கண்ணன் பல அவதாரங்களில் வேகமும், விறுவிறுப்பும், புதுமையும், நையாண்டியும், சூடும் சுவாரஸ்யமும் நிறைந்த எழுத்துக்கள் மூலம் கிராம ஊழியனை "இலக்கியவாதிகளின், கவனிப்புக்கும், பாராட்டுதலுக்கும், கண்டனங்களுக்கும் இலக்காக முடிந்தது" என்று அவரே குறிப்பிடுகிறார்.
இதழின் பெருமை
ந.பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், அ.வெ.ரா.கி., கலைவாணன், தி.ஜானகிராமன், எம்.டி.வாசுதேவன் எனப் பிற்காலத்தில் இலக்கிய வித்தகர்கள் எனச் சிறப்பாகப் பேசப்பட்ட அனைவரும் இந்த இதழில் எழுதியுள்ளனர். இதழின் உள்ளடக்கம் பொழுதுபோக்காக இல்லாமல் நுட்பமான மூளைச் செறிவேற்றுகிற இதழாக உள்ளது. கருத்தினை பன்முக ஆற்றலோடு காணுகிற தன்மையும், அதன் உள்ளார்ந்த நுட்பத்தை வெளிப்படுத்துகிற தன்மையும் ஒவ்வொரு படைப்புகளிலும் மேலோங்கியுள்ளது. சாதாரண அச்சு இயந்திரத்தை வைத்து தற்கால ஒளியச்சு முறையையும் விஞ்சும் அளவிற்கு அச்சாக்கியுள்ளது, இதழின் மீது பொறுப்பாளர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.
இந்த 'கிராம ஊழியன்' இதழ் 1947 மே மாதம் நிறுத்தப்பட்டு விட்டது. (காரணங்களும், இதற்குமேல் தகவல்களும் நம்மால் திரட்ட இயலவில்லை.)
* * * * *
