Tuesday, November 3, 2015

தெப்பக்குளம் - Theppakkulam



பெருமாள் மலை - Perumal Malai



பெருமாள் மலை செல்லும்  வழியிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் 


 பறவையின் பார்வை  கோணத்தில் ... பெருமாள் மலை

Courtesy: Google Maps
 



பெரிய ஏரி (செச்சை) - Periya Eri


பறவையின் பார்வை  கோணத்தில் ... பெரிய ஏரி

Courtesy: Google Maps




செச்சை என்ற இந்த கட்டிடம் கட்டப்பட்டது கிபி 14 ஆம் நூற்றாண்டு என்பது பெரும் வியப்பானது. ஆனால் இது சுமார் 600 ஆண்டுகள் கடந்தும் நம்மை அற்புதமான வடிவமைப்பும், வியப்பூட்டும்  கட்டிடக் கலையின் பொக்கிஷம், துறையூரின் அடையாளம்!

சிவன் வாழும் பெட்டியை தான் 'செச்சை' என்று அக்காலத்தில் அழைத்துள்ளனா். இதற்கு சான்றாக வீர சைவா்கள் (லிங்கம் கட்டி அய்யா்) தங்கள் கழுத்தில் ஒரு பெட்டகம் கட்டியிருப்பார்கள்..

இதன் உள்ளே லிங்கம் பொருத்தப்பட்டிருக்கும், இந்த பெட்டகத்துக்கு தினமும் பூஜை, வழிபாடு செய்து வந்துள்ளனா்.

கிபி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த செச்சை ஜமின்தார்கள் துறையூரை ஆண்ட காலத்தில் இது பொழுதுபோக்கு கூடமாக இருந்ததாகவும், ராணி மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்ட வசந்த மண்டபம் என்று பல வரலாற்று நிகழ்வுகளை தாங்கி நிற்கிறது.

தற்போது 280 ஏக்கா் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் பெரிய ஏரியின் நடுவில் அமைந்துள்ள செச்சையில் (தி - ச - மி 25 - 3 - 22) என்று தேதி பதிக்கப்பட்டு இருக்கிறது . வேறு சான்றுகள் எதுவும் இங்கு கிடைக்கவில்லை. 

சிவன் குடியிருக்கும் பெட்டகம் போன்ற வடிவமைப்பை உடையதால் அதை பலரும் ஆன்மீக ஸ்தலமாக கருதுகின்றனா். 

இதனை உறுதி செய்யும் வகையில் அன்று துறையூரை ஆட்சி செய்த மகாராஜாவை பற்றி அப்பகுதி வாசிகள் கூறுகையில்,

600 வருடங்களுக்கு முன்பு துறையூரை ஆண்ட மகாராஜா காசி ஸ்தல யாத்திரை சென்ற நேரத்தில் தன்னுடைய தம்பியான இலிங்கதுரையை மன்னராக நியமித்து சென்றுள்ளார். 

இலிங்கதுரையின் ஆட்சியில் துறையூர் நந்திகேஸ்வரா் ஆலயத்துக்கு தனி தீா்த்தக் குளம் வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தெப்பகுளத்தை உருவாக்கினார். அப்படி உருவாக்கப்பட்டது தான் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. 

அதோடு தன்னுடைய கஜானாவில் இருந்த மொத்த பணத்தையும் அன்னதானத்துக்காகவும், சொர்ணதானதுக்காகவும் செலவு செய்தார்.

இதற்கிடையில் காசிக்கு சென்ற மகாராஜா திரும்பியபோது தன்னுடைய அனுமதி இன்றி கஜானா காலியானதைக் கண்டு கோபம் அடைந்து தன்னுடைய தம்பியை சிறைசேதம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் மக்களுக்காக அரசின் கஜானாவில் எதையும் மிச்சம் வைக்காமல் செலவிட்டு அவா்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ததால் மக்களின் அன்பையும், அரசவை மந்திரிகளின் ஆதரவை பெற்றதால் அவா்கள் இலிங்கதுரையை சிறை சேதம் செய்யாமல் அவா் தப்பிக்க உதவி செய்தனா். 

தப்பி சென்ற அவா் மகான் ஆதி சிவபிரகாச சுவாமிகளை கண்டு அவரால் ஈா்க்கப்பட்டு சீடரானார். 

இதனிடையே துறையூரை ஆண்டுவந்த மகாராஜாவுக்கு முதுமை தொற்றிகொள்ள அவருக்கு வாரிசு இல்லாததால் தன்னுடைய வாரிசாக இருந்த தம்பியை தான் சிறைசேதம் செய்ய சொன்னதை நினைத்து வருத்தபட ஆரம்பித்துள்ளார். 

மகாராஜாவின் புலம்பலை கேட்ட மந்திரிகள் இலிங்கதுரையை நாங்கள் சிறைசேதம் செய்யவில்லை. அவர் உயிரோடு திருவண்ணாமலையில் உள்ளார் என்று கூறியதையடுத்து மகாராஜா மனம் மகிழ்ந்து தன்னுடைய தம்பியை அழைத்துவர உத்தரவிட்டார்.

ஆனால் குருநாதரை பிரிய மனமில்லாத லிங்கதுரை அண்ணனுடைய அழைப்பை ஏற்க மறுத்தார். 

ஆனால் அவரை வர வைக்க வேண்டும் என்று எண்ணிய மகாராஜா மகான் ஆதி சிவபிரகாச சுவாமிகளை வரவழைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளார். 

அதோடு அவரும் அவருடைய சீடா்களும் வந்து தங்க அரண்மனைக்கு எதிரே மடம் ஒன்றை கட்டினார். தற்போது பிரசன்னா திருமண மகாலுக்கு அருகே உள்ள பெரிய மடம் தான் அது. அவா் நினைத்தபடி ஆதி சிவபிரகாச சுவாமிகள் சீடர்களுடன் மடத்தில் தங்க வைக்கப்பட்டதோடு, தம்பியை மீண்டும் மன்னராக்கினார். 

மன்னராக பொறுப்பேற்ற இலிங்கதுரை மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும், அவா்களும் தம் குருநாதரின் உபதேசங்களையும் ஏற்று வளமான வாழ்க்கையை பெற வேண்டும் என்றும் வேண்டி அமைக்கப்பட்டது தான் ஏரியின் நடுவே அமைந்துள்ள செச்சைக் கட்டிடமாகும்.

இந்த செச்சையில் பல மகான்களின் ஆன்மிக சொற்பொழிவுகள், நடைபெற்று கடந்த 600 வருடங்களுக்கும் மேலாக துறையூா் மக்களுக்கு ஆன்மீக ஸ்தலமாக கம்பீரமாக ஏரியின் நடுவில் காட்சியளிக்கிறது

தகவல்கள்: அருள்மிகு குமார தேவர் திருமடம் திருமுதுகுன்றம் (விருதாச்சலம்) 07-11-2001 ல் வெளியிட்ட "சீர்வளர் சீர் ஆதி சிவப்பிரகாச சுவாமிகள் வரலாறு" நூலிலிருந்து. 


பேருந்து நிலையம் - Bus Stand


பேருந்து நிலையம் - Bus Stand


Friday, April 1, 2011

துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதி

புதிதாக உருவாக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 146 ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்: துறையூர் தாலுக்கா முசிறி தாலுக்கா (பகுதி): கோட்டாத்தூர், புத்தனாம்பட்டி மற்றும் அபினிமங்கலம் கிராமங்கள்




மாவட்டம்: திருச்சி
மொத்த வாக்காளர்கள்: 178193
ஆண் வாக்காளர்கள்: 88316
பெண் வாக்காளர்கள்: 89877
திருநங்கை வாக்காளர்கள்: 0

Tuesday, June 15, 2010

4. அரசியல் தலைவர்களின் வருகை/சொற்பொழிவு

4.1 அறிஞர் அண்ணா

1932 ல் துறையூரில் தமிழர் மாநாடு

பெரியார் அவர்கள் திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூரில் "தமிழர் மாநாடு" ஒன்றை ஏற்பாடுச் செய்திருந்தார். அந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளுமாறு அண்ணாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பெரியாரின் அன்பு அழைப்பிற்கினங்க அண்ணா அம்மாநாட்டில் கலந்துக் கொண்டு, சீரிய சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அது வரையில் அண்ணா அவர்கள் சென்னையிலுள்ள இரு சிலருக்கே அறிமுகமானவராயிருந்தார். துறையூர் மாநாட்டிற்குப் பிறகு தான் அவரைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நீதிக்கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்கு அறிமுகப்படுத்தியது.


* * * * *

3. இதழியல்

3.1 கிராம ஊழியன்

திருச்சி மாவட்டம் துறையூரிலிரிந்து கவிஞர் திரிலோகசீதாராமை ஆசிரியராகவும், அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியாரை நிர்வாகப் பொறுப்பாளராகவும் கொண்டு "கிராம ஊழியன்" இதழ் வெளி வந்தது.


ஆரம்ப காலத்தில் அரசியல் பத்திரிகையாக இருந்த கிராம ஊழியன் காலப்போக்கில் மறுமலர்ச்சி இலக்கிய இதழாக மாறியது. எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனைக் கொண்டு கிராம ஊழியன் 1943 ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் இருமுறையாக வெளிவரத் தொடங்கியது. கு.பா.ரா. , ஜானகி ராமனை கிராம ஊழியனில் எழுதவைத்தார். 1944 ஆம் ஆண்டின் இறுதியில் கு.பா.ரா உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அதற்குப் பிறகு வல்லிக்கண்ணன் கிராம ஊழியனில் பணியாற்ற வந்தார்.

ஒரு வருடம் வல்லிக்கண்ணன் துணை ஆசிரியர் பொறுப்பிலும், பின்னர் திருலோகசீதாராம் ஆசிரியர் பதவியிலிருந்து விலகி திருச்சி 'சிவாஜி' பத்திரிகையின் பொறுப்பை ஏற்கப் போய்விட்டதால் வ.க. ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கவிஞர் கலைவாணன், ஈழத்துக் கவிஞர்களான நாவற்குழியூர் நடராஜன், மகாகவி, சோ.தியாகராஜன், க.இ.சரவணமுத்து ஆகியோரின் கவிதைகளையும் ஊழியன் வெளியிட்டது. தி.க.சிவசங்கரன் கவிதை, நாடகம், விமர்சனம் ஆகியவற்றை எழுதினார். அசோகன் (ரா.சு.கோமதி நாயகம்) என்பவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியிடப்பட்டன.

வல்லிக்கண்ணன் பல அவதாரங்களில் வேகமும், விறுவிறுப்பும், புதுமையும், நையாண்டியும், சூடும் சுவாரஸ்யமும் நிறைந்த எழுத்துக்கள் மூலம் கிராம ஊழியனை "இலக்கியவாதிகளின், கவனிப்புக்கும், பாராட்டுதலுக்கும், கண்டனங்களுக்கும் இலக்காக முடிந்தது" என்று அவரே குறிப்பிடுகிறார்.
 
இதழின் பெருமை

ந.பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், அ.வெ.ரா.கி., கலைவாணன், தி.ஜானகிராமன், எம்.டி.வாசுதேவன் எனப் பிற்காலத்தில் இலக்கிய வித்தகர்கள் எனச் சிறப்பாகப் பேசப்பட்ட அனைவரும் இந்த இதழில் எழுதியுள்ளனர். இதழின் உள்ளடக்கம் பொழுதுபோக்காக இல்லாமல் நுட்பமான மூளைச் செறிவேற்றுகிற இதழாக உள்ளது. கருத்தினை பன்முக ஆற்றலோடு காணுகிற தன்மையும், அதன் உள்ளார்ந்த நுட்பத்தை வெளிப்படுத்துகிற தன்மையும் ஒவ்வொரு படைப்புகளிலும் மேலோங்கியுள்ளது. சாதாரண அச்சு இயந்திரத்தை வைத்து தற்கால ஒளியச்சு முறையையும் விஞ்சும் அளவிற்கு அச்சாக்கியுள்ளது, இதழின் மீது பொறுப்பாளர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.

இந்த 'கிராம ஊழியன்' இதழ் 1947 மே மாதம் நிறுத்தப்பட்டு விட்டது. (காரணங்களும், இதற்குமேல் தகவல்களும் நம்மால் திரட்ட இயலவில்லை.)

* * * * *

2. வரலாற்றுப் பதிவுகள்

2.1 சங்க இலக்கியமும், சந்தேகங்களும்

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சங்க இலக்கியங்கள் ... எங்கேயோ கேள்விப்பட்ட இலக்கிய சொற்கள்!

ஆகா, நமக்கும் அவற்றிற்க்கும் நெடுந்தொலைவு என ஓட வேண்டாம். நமது ஊரைப் பற்றி சங்க இலக்கியங்களில் தான் முதல் வரலாற்றுப் பதிவு இருப்பதாய் தோன்றியது.

சங்க இலக்கியங்களைப் பற்றி ஒரு சிறு முன்னோட்டம்

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் எமக்கு அறியத்தருகின்றன.

சங்க இலக்கியங்களை பதினெண் கீழ்க்கணக்கு மற்றும் பதினெண் மேற்கணக்கு (எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள்) நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுத்தடக்கியுள்ளனர் நம் முன்னோர்.

இவற்றில் எட்டுத்தொகையைப் பற்றிப் பார்ப்போம்

எட்டுத்தொகை நூல்கள் என்பவை பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டு பின்னர் ஒருசேர தொகுக்கப்பட்டவை. இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை.

எட்டுத்தொகை நூல்களாவன:

நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
 
இத்தொப்பில், புறநானூற்றில் தான் "துறையூர் புலவர்" இயற்றிய பாடலொன்று இடம்பெற்றுள்ளது.
 
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. புலவர் அரசர்களைப் பாடியதை "அவனை அவர் பாடியது" என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.
 
இதில் "துறையூர் ஓடைக்கிழார்" பாடிய பாடல் "வாழ்த்தி உண்போம்!"
 
136. வாழ்த்தி உண்போம்!

வேள் ஆய் அண்டிரனைத் துறையூர் ஓடைக்கிழார் என்னும் புலவர் புகழும் போது, 'வள்ளலே நீ துறையூர்த் துறை முன்னர் காணும் நுண்ணிய பல மணிலினும் பலநாள் வாழ்கவென வாழ்த்தி உண்டு மகிழ்வோம்,

" . . .
. . . .
தண்புனல் வாயிற்றுறையூர் முன்றுறை
நுண்பல மணலினு மேத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே!" (புறம். 136)

என வாழ்த்தியுள்ளார்.

இதைப் படித்ததும், உங்களைப் போலவே எமக்கும் மழ்ச்சிப் பெருக்கெடுத்தது. இதைச் சற்று ஆய்ந்துப் பார்க்கையில் ... நமக்கு பல வியப்புகளும், வினாக்களுமே விடையாய் கிடைத்திற்று.

முதலில் வியப்புகளைப் பார்ப்போம்.

இப்பாடலில் உள்ள "துறையூர்" நமது ஊரா என தகவல் திரட்ட முற்படுகையில்; தமிழகத்தில் இத்துனை துறையூர்களா என வியப்பாய் ...

வியப்புகள்

1. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர். (அஞ்சல் எண்: 621010)
2. கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்துறையூர். (அஞ்சல் எண்: 607205)
3. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள துரையூர். (அஞ்சல் எண்: 628720)
4. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துரையூர். (அஞ்சல் எண்: 627720)
5. சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட துரையூர்.
6. அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்க்குட்பட்ட துரையூர்.
7. தஞ்சை ஒன்றியத்திற்க்குட்பட்ட துரையூர்.

. . . இன்னும், எத்துனைத் துறையூர்களோ?

வினாக்கள்

இப்பாடலிலுள்ள துறையூர் எது?

நம் துறையூருக்கும் ஓடை / நதிக்கும் ஏதேனும் தொடர்பு இருந்திருக்குமோ?

ஒரு வேளை கவிஞர் குறிப்பிடும் ஓடை (கி. பி. 2 - 3 நூற்றாண்டு வாக்கில்) பெரிய ஏரியின் வடிகால் வாய்க்காலாக (சின்ன ஏரியை அடைவது) இருந்திருக்குமோ?
அல்லது
துறையூருக்கு தென்மேற்கில் ஓடும் கண்ணணூர் ஓடை?
அல்லது
அந்த ஓடை, இன்று இல்லாமற் கூடப் போயிருக்கலாம்.

சங்க காலத்திலுள்ள, எத்துனையோ ஒடைகளும், நதிகளும் தத்தம் போக்கினையும், திசைகளையும் மாற்றியுள்ளன, சில மறைந்தும் போயுள்ளன. இதுக்குறித்து எத்தனையோ ஆய்வறிக்கைகள் உள்ளன. ஆதலால் பாடல் பாடப்பட்ட காலத்திலிருந்த ஒடை ஒன்று தற்சமயம் இல்லாமற் போவதில் வியப்பில்லை. அப்படியென்றாலும் இது ஏனைய துறையூர்களுக்கும் பொருந்துமே!

இந்த வகையில் கடலூர் மாவட்டத்திலுள்ள "திருத்துறையூரை"த் தவிர. திருத்துறையூர் (வடக்கே - தென்பெண்ணை) தெற்கே ஊரை ஒட்டினாற்போல் ஓடும் வறண்ட ஓடை (ஓரையாறு) இன்றளவும் இப்பாடலுக்கு பொருத்தமாகவே ...

திருத்துறையூர் திருமுறைத் திருத்தலங்களுள் ஒன்று! (தேவாரம் பாடப் பெற்றச் சிவாலயங்கள்.) மற்றும் தொன்மையான கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் "ராஜராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருத்துறையூர்" என இவ்வூருக்கு வரலாற்றுப் பதிவுகள் அதிகம்.

இதுக் குறித்து நாமே நேரில் சென்று ஆய்வறிந்துள்ளோம்.
மேலும் தகவல் பெற: திருத்துறையூர்

ஆக இப்புறநானூற்றுப் பாடலுக்கு... நாம் சொந்தக்காரர்களா?
இல்லையென்றேத் தோன்றுகிறது!

துறையூர் அன்பர்கள், மனம் வருந்த வேண்டாம். நமது துறையூருக்கு அருகிலுள்ள தேனூர் மற்றும் திருத்தலையூரும் தேவாரம் பாடப் பெற்றத் திருத்தலங்களே! இவற்றைப் பற்றி பின்னொரு பின்னுட்டங்களில் விரிவாகப் பார்ப்போம்.

* * * * *

1.1 ஊரைப் பற்றி

துறையூர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும்.

2001 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 30,998 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். துறையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.

நகரசபைப் பற்றி

தற்சமயம் நகரசபையில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன.

17.01.1970 முதல் நகர பஞ்சாயத்திலிருந்து மூன்றாம் நிலை நகராட்சியாக,
22.05.1998 முதல் மூன்றாம் நிலை நகராட்சியிலிருந்து இரண்டாம் நிலை நகராட்சியாக,
02.12.2008 முதல் இரண்டாம் நிலை நகராட்சியிலிருந்து தேர்வுநிலை நகராட்சியாக ...

சட்டமன்றத் தொகுதி

கடந்த 2006 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை உப்பிலியபுரம் தொகுதியிலிருந்து தற்போது "துறையூர்" சட்டமன்றத் தொகுதியாக!

நாடாளுமன்றத் தொகுதி

பெரம்பலூர் (தனி) தொகுதிக்குட்பட்டது.

வரமா? சாபமா?

பட்டிமன்றமே வைக்கலாம்; துறையூரை இவ்வாறு பிரித்தமைக்கு;

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி (பெரம்பலூர் மாவட்டமாக பிரிந்தபொழுது திருவள்ளுவர் மாவட்டத்தில், பின்பு மீண்டும் திருச்சியில் இணைந்தது தனிக்கதை)
கல்வி மாவட்டம் : முசிறி
நாடாளுமன்றத் தொகுதி : பெரம்பலூர் (தனி)
சட்டமன்றத் தொகுதி : துறையூர் (இதற்கு முன்பு உப்பிலியபுரம்)

* * * * *
வரலாறு

ஜமீந்தார்களால் (துரை) ஆளப்பட்ட ஊரென்பதால் துரை + ஊர் = "துரையூர்" எனவும்,

துறை (நீர்த்துறை) கள் நிறைந்த (பெரிய ஏரி, சின்ன ஏரி மற்றும் நீர்க்குட்டைகள்) ஊரென்பதால் துறை + ஊர் = "துறையூர்" எனவும் ஊர்ப்பெயர் மருகியிருக்கலாம்.

"தீர்த்தபுரி" எனும் பெயராலும் அழைக்கப்பட்டுள்ளதாகச் செய்தி.


துரையூரா / துறையூரா ???

வழுவானத் தகவல் திரட்டும் முயற்சியில் ...

* * * * *

Wednesday, June 9, 2010

1. முதற்பதிவு

துறையூர் சொந்தங்களுக்கும், வலை உலா வந்திருக்கும் விருந்தினர்களுக்கும் எமது இனிய வணக்கங்கள்!

கல்வியோ, தொழிலோ,
ஏனையக் காரணத்திலோ,
வேறிடம் வசித்தாலும்,
நினைவுகளின் வேரிடம்,
சொந்தவூரின் ஈரமிருக்கும்!

பெட்டிச்செய்தியென்றாலும் பெருமிதமே,
தினசரிகளில் ஊரைக்கண்டதும்!
தொலைக்காட்சியிலோ,
வலைப்பக்கங்களிலோ,
மண்மணக்கை யில்மனமகிழுது!

சிலச்சிற்றூர்களும் சரித்திரத்தில்
தோரணமாயிருக்கையில்!
ஏங்கித்தான் போகின்றோம்,
எமதூரின் புகழறியாமல்,
தெரியாமல் !!!

யாமறிந்த வரலாற்று / சமகால நிகழ்வுகளை வலைப்பதிவுகளாக்கும் முயற்சியில் ...
- பா. சங்கர்