Tuesday, June 15, 2010

2. வரலாற்றுப் பதிவுகள்

2.1 சங்க இலக்கியமும், சந்தேகங்களும்

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சங்க இலக்கியங்கள் ... எங்கேயோ கேள்விப்பட்ட இலக்கிய சொற்கள்!

ஆகா, நமக்கும் அவற்றிற்க்கும் நெடுந்தொலைவு என ஓட வேண்டாம். நமது ஊரைப் பற்றி சங்க இலக்கியங்களில் தான் முதல் வரலாற்றுப் பதிவு இருப்பதாய் தோன்றியது.

சங்க இலக்கியங்களைப் பற்றி ஒரு சிறு முன்னோட்டம்

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் எமக்கு அறியத்தருகின்றன.

சங்க இலக்கியங்களை பதினெண் கீழ்க்கணக்கு மற்றும் பதினெண் மேற்கணக்கு (எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள்) நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுத்தடக்கியுள்ளனர் நம் முன்னோர்.

இவற்றில் எட்டுத்தொகையைப் பற்றிப் பார்ப்போம்

எட்டுத்தொகை நூல்கள் என்பவை பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டு பின்னர் ஒருசேர தொகுக்கப்பட்டவை. இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை.

எட்டுத்தொகை நூல்களாவன:

நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
 
இத்தொப்பில், புறநானூற்றில் தான் "துறையூர் புலவர்" இயற்றிய பாடலொன்று இடம்பெற்றுள்ளது.
 
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. புலவர் அரசர்களைப் பாடியதை "அவனை அவர் பாடியது" என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.
 
இதில் "துறையூர் ஓடைக்கிழார்" பாடிய பாடல் "வாழ்த்தி உண்போம்!"
 
136. வாழ்த்தி உண்போம்!

வேள் ஆய் அண்டிரனைத் துறையூர் ஓடைக்கிழார் என்னும் புலவர் புகழும் போது, 'வள்ளலே நீ துறையூர்த் துறை முன்னர் காணும் நுண்ணிய பல மணிலினும் பலநாள் வாழ்கவென வாழ்த்தி உண்டு மகிழ்வோம்,

" . . .
. . . .
தண்புனல் வாயிற்றுறையூர் முன்றுறை
நுண்பல மணலினு மேத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே!" (புறம். 136)

என வாழ்த்தியுள்ளார்.

இதைப் படித்ததும், உங்களைப் போலவே எமக்கும் மழ்ச்சிப் பெருக்கெடுத்தது. இதைச் சற்று ஆய்ந்துப் பார்க்கையில் ... நமக்கு பல வியப்புகளும், வினாக்களுமே விடையாய் கிடைத்திற்று.

முதலில் வியப்புகளைப் பார்ப்போம்.

இப்பாடலில் உள்ள "துறையூர்" நமது ஊரா என தகவல் திரட்ட முற்படுகையில்; தமிழகத்தில் இத்துனை துறையூர்களா என வியப்பாய் ...

வியப்புகள்

1. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர். (அஞ்சல் எண்: 621010)
2. கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்துறையூர். (அஞ்சல் எண்: 607205)
3. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள துரையூர். (அஞ்சல் எண்: 628720)
4. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துரையூர். (அஞ்சல் எண்: 627720)
5. சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட துரையூர்.
6. அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்க்குட்பட்ட துரையூர்.
7. தஞ்சை ஒன்றியத்திற்க்குட்பட்ட துரையூர்.

. . . இன்னும், எத்துனைத் துறையூர்களோ?

வினாக்கள்

இப்பாடலிலுள்ள துறையூர் எது?

நம் துறையூருக்கும் ஓடை / நதிக்கும் ஏதேனும் தொடர்பு இருந்திருக்குமோ?

ஒரு வேளை கவிஞர் குறிப்பிடும் ஓடை (கி. பி. 2 - 3 நூற்றாண்டு வாக்கில்) பெரிய ஏரியின் வடிகால் வாய்க்காலாக (சின்ன ஏரியை அடைவது) இருந்திருக்குமோ?
அல்லது
துறையூருக்கு தென்மேற்கில் ஓடும் கண்ணணூர் ஓடை?
அல்லது
அந்த ஓடை, இன்று இல்லாமற் கூடப் போயிருக்கலாம்.

சங்க காலத்திலுள்ள, எத்துனையோ ஒடைகளும், நதிகளும் தத்தம் போக்கினையும், திசைகளையும் மாற்றியுள்ளன, சில மறைந்தும் போயுள்ளன. இதுக்குறித்து எத்தனையோ ஆய்வறிக்கைகள் உள்ளன. ஆதலால் பாடல் பாடப்பட்ட காலத்திலிருந்த ஒடை ஒன்று தற்சமயம் இல்லாமற் போவதில் வியப்பில்லை. அப்படியென்றாலும் இது ஏனைய துறையூர்களுக்கும் பொருந்துமே!

இந்த வகையில் கடலூர் மாவட்டத்திலுள்ள "திருத்துறையூரை"த் தவிர. திருத்துறையூர் (வடக்கே - தென்பெண்ணை) தெற்கே ஊரை ஒட்டினாற்போல் ஓடும் வறண்ட ஓடை (ஓரையாறு) இன்றளவும் இப்பாடலுக்கு பொருத்தமாகவே ...

திருத்துறையூர் திருமுறைத் திருத்தலங்களுள் ஒன்று! (தேவாரம் பாடப் பெற்றச் சிவாலயங்கள்.) மற்றும் தொன்மையான கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் "ராஜராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருத்துறையூர்" என இவ்வூருக்கு வரலாற்றுப் பதிவுகள் அதிகம்.

இதுக் குறித்து நாமே நேரில் சென்று ஆய்வறிந்துள்ளோம்.
மேலும் தகவல் பெற: திருத்துறையூர்

ஆக இப்புறநானூற்றுப் பாடலுக்கு... நாம் சொந்தக்காரர்களா?
இல்லையென்றேத் தோன்றுகிறது!

துறையூர் அன்பர்கள், மனம் வருந்த வேண்டாம். நமது துறையூருக்கு அருகிலுள்ள தேனூர் மற்றும் திருத்தலையூரும் தேவாரம் பாடப் பெற்றத் திருத்தலங்களே! இவற்றைப் பற்றி பின்னொரு பின்னுட்டங்களில் விரிவாகப் பார்ப்போம்.

* * * * *

No comments:

Post a Comment