Tuesday, June 15, 2010

3. இதழியல்

3.1 கிராம ஊழியன்

திருச்சி மாவட்டம் துறையூரிலிரிந்து கவிஞர் திரிலோகசீதாராமை ஆசிரியராகவும், அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியாரை நிர்வாகப் பொறுப்பாளராகவும் கொண்டு "கிராம ஊழியன்" இதழ் வெளி வந்தது.


ஆரம்ப காலத்தில் அரசியல் பத்திரிகையாக இருந்த கிராம ஊழியன் காலப்போக்கில் மறுமலர்ச்சி இலக்கிய இதழாக மாறியது. எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனைக் கொண்டு கிராம ஊழியன் 1943 ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் இருமுறையாக வெளிவரத் தொடங்கியது. கு.பா.ரா. , ஜானகி ராமனை கிராம ஊழியனில் எழுதவைத்தார். 1944 ஆம் ஆண்டின் இறுதியில் கு.பா.ரா உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அதற்குப் பிறகு வல்லிக்கண்ணன் கிராம ஊழியனில் பணியாற்ற வந்தார்.

ஒரு வருடம் வல்லிக்கண்ணன் துணை ஆசிரியர் பொறுப்பிலும், பின்னர் திருலோகசீதாராம் ஆசிரியர் பதவியிலிருந்து விலகி திருச்சி 'சிவாஜி' பத்திரிகையின் பொறுப்பை ஏற்கப் போய்விட்டதால் வ.க. ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கவிஞர் கலைவாணன், ஈழத்துக் கவிஞர்களான நாவற்குழியூர் நடராஜன், மகாகவி, சோ.தியாகராஜன், க.இ.சரவணமுத்து ஆகியோரின் கவிதைகளையும் ஊழியன் வெளியிட்டது. தி.க.சிவசங்கரன் கவிதை, நாடகம், விமர்சனம் ஆகியவற்றை எழுதினார். அசோகன் (ரா.சு.கோமதி நாயகம்) என்பவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியிடப்பட்டன.

வல்லிக்கண்ணன் பல அவதாரங்களில் வேகமும், விறுவிறுப்பும், புதுமையும், நையாண்டியும், சூடும் சுவாரஸ்யமும் நிறைந்த எழுத்துக்கள் மூலம் கிராம ஊழியனை "இலக்கியவாதிகளின், கவனிப்புக்கும், பாராட்டுதலுக்கும், கண்டனங்களுக்கும் இலக்காக முடிந்தது" என்று அவரே குறிப்பிடுகிறார்.
 
இதழின் பெருமை

ந.பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், அ.வெ.ரா.கி., கலைவாணன், தி.ஜானகிராமன், எம்.டி.வாசுதேவன் எனப் பிற்காலத்தில் இலக்கிய வித்தகர்கள் எனச் சிறப்பாகப் பேசப்பட்ட அனைவரும் இந்த இதழில் எழுதியுள்ளனர். இதழின் உள்ளடக்கம் பொழுதுபோக்காக இல்லாமல் நுட்பமான மூளைச் செறிவேற்றுகிற இதழாக உள்ளது. கருத்தினை பன்முக ஆற்றலோடு காணுகிற தன்மையும், அதன் உள்ளார்ந்த நுட்பத்தை வெளிப்படுத்துகிற தன்மையும் ஒவ்வொரு படைப்புகளிலும் மேலோங்கியுள்ளது. சாதாரண அச்சு இயந்திரத்தை வைத்து தற்கால ஒளியச்சு முறையையும் விஞ்சும் அளவிற்கு அச்சாக்கியுள்ளது, இதழின் மீது பொறுப்பாளர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.

இந்த 'கிராம ஊழியன்' இதழ் 1947 மே மாதம் நிறுத்தப்பட்டு விட்டது. (காரணங்களும், இதற்குமேல் தகவல்களும் நம்மால் திரட்ட இயலவில்லை.)

* * * * *

1 comment:

  1. வணக்கம்
    வருகிற மாத யுகமாயினி இதழில் தி.க.சி அவர்கள் அவருடைய தொடர் கட்டுரையில், அவருடைய ஆசிரியர் வல்லிக்கண்ணனைப் பற்றி எழுதியிருக்கிறார். நீங்கள் பதிவு செய்திருப்பதிலிருந்து அவர் சற்றுதான் மாறுபடுகிறார். ஆனால், இன்று அவர் மட்டுமே வல்லிக்கண்ணன் தொடர்பான ஆதாரபூர்வ தகவல் அளிக்கக்கூடியவர். இரண்டாவது கழனியூரன். வல்லிக்கண்ணனுடன் நிறைய சுற்றியவர்.
    திருச்சியில், ஜங்ஷன் அருகில் முத்துவேலழகர் கடையில் யுகமாயினி கிடைக்கும். அவசியம் பாருங்கள். தி க சிக்கு 84 வயது. தொடர்பு கொண்டு பேசுவதில் விருப்பம் என்றால், அவருடைய தொலைபேசி எண்: 0462-2333456 யுகமாயினி சித்தன் அறிமுகப்படுத்தியதாக சொல்லலாம்தான் -
    சித்தன்

    ReplyDelete